/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மாநில அமைப்பு துவக்கம்
/
பழங்குடியின மாநில அமைப்பு துவக்கம்
ADDED : அக் 10, 2011 10:14 PM
ஊட்டி : தமிழகத்தில் உள்ள குரும்பர், தோடர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கன், இருளர், காணிகாரன் மற்றும் மலையாளி ஆகிய பழங்குடியின மக்களை உள்ளடக்கி தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு என்ற மாநில அளவிலான புதிய அமைப்பு நேற்று துவக்கப்பட்டது.ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நடந்த துவக்க விழாவில், தலைவராக குணசேகரன் (சேலம்), செயலாளராக பாலன் (எருமாடு), பொருளாளராக வெங்கடாசலம், மாநில அமைப்பு செயலாளராக சத்தியராஜ் (ஊட்டி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விழாவில் தலைவர் குணசேகரன் பேசுகையில், ''தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் 36 ஜாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 ஜாதிகள் தான் உண்மையான பழங்குடியினர். மீதமுள்ள 26 ஜாதிகள் போலியானவை. போலியான ஜாதிகளை பழங்குடியினர் பட்டியலிருந்து அரசு நீக்க வேண்டும். பழங்குடியினருக்கான நிதியை பிற திட்டங்களுக்கு அரசு செயல்படுத்தி விட்டு, ஒரு சதவீத நிதியைதான் பழங்குடியினர் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன. பழங்குடியின மக்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளை பெறவே இந்த புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.' என்றார்.கூட்டத்தில், பழங்குடியின மக்களின் அறியாமையை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக நில அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு தர வேண்டும்; தற்போது உள்ள நிலங்களை பாதுகாக்க வேண்டும்; இந்திய அரசியல் சாசனம் 5வது அட்டவணையை தமிழகத்தில் அமலாக்க வேண்டும்; பழங்குடியினருக்கான ஆன்றோர் மன்றம் புனரமைக்க வேண்டும்; குரும்பன்ஸ் பழங்குடியினர் என்று வழங்கிய ஜாதி சான்றுதழ்களை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவுக்கு, 'தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் பேரவை' தலைவர் குபேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் சண்முக கம்பட்டன், கேரளா குருமன்ஸ் சமாஜம் தலைவர் கார்வர்ணன், ஆதிவாசி பெடரேஷன் நிர்வாகி பாலன் பூதாரி முன்னிலை வகித்தனர்.

