/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டச்சத்து நிறைந்த நாவல் பழ சீசன் துவக்கம்
/
ஊட்டச்சத்து நிறைந்த நாவல் பழ சீசன் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2025 09:31 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில்,மனிதர்களுக்கு மட்டுமின்றி, வனவிலங்குகளுக்கும், ஊட்டச்சத்து நிறைந்த, மருத்துவ குணம் கொண்ட, நாவல் பழ சீசன் துவங்கியுள்ளது.
நீலகிரியில் நெல்லிக்காய், அத்தி மரங்கள், 'மக்னோலியா சம்பக்' எனப்படும் செண்பக மரங்கள், ருத்ராட்சை குடும்பத்தை சேர்ந்த விக்கி, நாவல், உட்பட அரிய வகை காட்டு பழ மரங்கள் உள்ளன.
பறவைகள் முதல் யானைகள் வரை விலங்கினங்களின் ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாக இவை வனங்களில் உள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற மரங்கள் தற்போது பல இடங்களிலும் வளர்க்கப்படுகின்றன.
அதில், வனங்களில் காணப்படும் நாவல் மற்றும் குறுநாவல் பழங்கள் சீசன் தற்போது குன்னூர் - கோத்தகிரி மற்றும் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் துவங்கி உள்ளது. இவற்றை உட்கொள்ள கரடிகள் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி கலாசார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சிவதாஸ் கூறுகையில்,
பல்லுயிர் பெருக்கத்திற்கு உரிய வகை மரங்களில் நாவல் மரங்களும் ஒன்று. உயர்ந்த மலை பகுதிகளில் ஈரம் அதிகம் உள்ள இடங்களில் நாவல் மற்றும் குறு நாவல் பழங்கள் வளர்கிறது. ஒரு மரம் வளர, 15 முதல் 25 ஆண்டுகளாகிறது.
மனித தேவையின்வளர்ச்சி திட்டங்களுக்காக, இந்த மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில், நாவல் பழங்கள் மற்றும் இலைகளை அதிகம் விரும்பி உண்ணும் கருங்குரங்குகளும் பல்வேறு காரணங்களால் அழிவின் பிடியில் உள்ளன.
குரங்கு, மான், கரடி மற்றும் பறவைகள், மலபார் ஜெயின்ட் ஸ்குரில் மட்டுமின்றி பூச்சி இனங்களும் இவற்றை தேடி வரும். கோவில்களில் புனிதத்தை வெளிப்படுத்தும் விதமாக படுகரின மக்களின் கோவில்களில் இந்த மரங்கள் ஸ்தல விருட்சமாக உள்ளன.
இயற்கை ஊட்டச்சத்து நிறைந்த,மருத்துவ குணம் வாய்ந்த இந்த மரங்களை சாலையோரங்களிலும் வனப்பகுதிகளிலும் அதிகளவில் வளர்க்க முன்வர வேண்டும், என்றார்.