/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ---பாஸ் பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
/
இ---பாஸ் பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
ADDED : மே 01, 2025 11:21 PM

கூடலுார்; கூடலுார்- ஊட்டி சாலை சோதனை மையம் பகுதியில் 'நெட்ஒர்க்' பிரச்னை காரணமாக, சுற்றுலா பயணிகள் இ--பாஸ் பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
நீலகிரியில், கோடை சீசனில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்., 1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
தொடர்ந்து, கூடலுார் நாடுகாணி உள்ளிட்ட, 8 சோதனை சாவடிகள் வழியாக, கூடலுார், கேரளா, கர்நாடக இடையில் இயக்கப்படும் வாகனங்களுக்கு, இ--பாஸ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக -கேரளா எல்லையில், 22ம் தேதி இ--பாஸ் சோதனை பணிகள் நிறுத்தப்பட்டு, இதற்கு மாற்றாக, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை 'சில்வர் கிளவுட்' வன சோதனை சாவடி பகுதியில், இ-பாஸ் சோதனை மையம் செயல்பட துவங்கியது.
இந்நிலையில், நேற்று மதியம் முதல் அப்பகுதியில் 'நெட்ஒர்க்' பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக, இ-பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'நெட் ஒர்க் பிரச்னைகள் ஏற்படும்போது, இ--பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது போன்ற நேரங்களில், மாற்று ஏற்பாடு முறையில் சுற்றுலா வாகனங்களை ஊட்டிக்கு அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.