ADDED : நவ 25, 2024 10:29 PM

ஊட்டி; ஊட்டிக்கு நாளை ஜனாதிபதி வருவதை ஒட்டி, ெஹலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (27ம் தேதி) டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில், ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் இறங்கி காரில் ஊட்டி ராஜ்பவனில் வந்து தங்குகிறார்.
மூன்று நாட்கள் ஜனாதிபதி தங்குவதால், போலீசார் சார்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை ஒட்டி, சாலை மார்க்கமாக பயணிக்கும் இடங்களில் சம்மந்தப்பட்ட துறை சார்பில், 'பேட்ஜ் ஒர்க்' பணிகள் நடந்து வருகிறது. ராஜ்பவனில் தங்குவதால் அப்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு வர வாய்ப்பிருப்பதால், பூங்கா நிர்வாகம், முக்கிய பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. வாகனம் செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு, துாய்மை படுத்தப்படும் பணிகள் நடக்கிறது.
இந்நிலையில், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் ெஹலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவை சூலுாரில் இருந்து வந்த ெஹலிகாப்டர், இரண்டு முறை ஹெலிபேட் பகுதியில் இறங்கியது. மேலும், இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், 28ம் தேதி ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ள, குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில், மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கீதா உட்பட அதிாரிகள் ஆய்வு செய்து, அங்குள்ள ராணுவ அதிகாரிகளிடையே, நிகழ்ச்சி ஏற்பாடு குறித்த ஆலோசனை நடத்தினர்.

