/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதியில் முதிர்ந்த மூங்கில்கள் அகற்றம்
/
வனப்பகுதியில் முதிர்ந்த மூங்கில்கள் அகற்றம்
ADDED : நவ 21, 2025 05:52 AM

பந்தலுார்: தமிழக எல்லையை ஒட்டிய, கேரளா நிலம்பூர் வனத்தில் வயது முதிர்ந்த மூங்கில்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பந்தலுார் மற்றும் இதனை ஒட்டிய கேரளா மாநில வனப்பகுதிகளில், மூங்கில்கள் அதிக அளவில் உள்ளன. அதில், கேரளா மாநிலத்தில் வயது முதிர்ந்த மூங்கில், அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன் கேரள மாநில வனத்துறை சார்பில், மூங்கில்களில் பல்வேறு கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு முதிர்ந்த மூங்கில் குத்திலிருந்து, 8 முதல் 10 முதிர்ந்த மூங்கில்களை அறுவடை செய்யலாம். 40 வருடங்களுக்கு மேல் வளர்ந்த மூங்கில்களில், நெல் விளைந்து மூங்கில் அரிசிகள் உருவாகி, மூங்கில் மொத்தமாக அழிந்து விடும். மேலும், யானைக ளுக்கான உணவு தேவை பற்றாக்குறை ஏற்படும். இந்நிலையில், தமிழக எல்லையான கீழ் நாடுகாணி மற்றும் பொன்வயல் வனத்தை ஒட்டிய, நிலம்பூர் வனப்பகுதியில் மூங்கில் பூத்து காய துவங்கியுள்ளது.
இதனால், முதிர்ந்த மூங்கில்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மூங்கில்கள் அகற்றும் பணி மேற்கொண்டுள்ள நிலையில், மூங்கில் தளிர்கள் கிடைக்காமல் யானைகள் உணவுக்காக இரவு, 7:00 மணிக்கு மேல் தமிழக-கேரளா சாலையில் முகாமிட்டு வருகின்றன.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போதைக்கு யானைகளுக்கான உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், மூங்கில் முழுமையாக அழிவது கட்டுப்படுத்தப்படுவதுடன், இளம் மூங்கில்களை வளர்க்க முடியும்,' என்ற னர்.

