ADDED : நவ 01, 2026 06:20 PM

குன்னூர்: குன்னூர் பகுதியில் மீண்டும் கனமழையின் காரணமாக மலைப்பாதையில் மண் சரிவுடன் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த வாரம் கனமழையினால் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ.,1) அதிகாலை 3:30 மணியிலிருந்து காலை, 8:00 மணி வரை கனமழை பெய்தது. ரன்னிமேட்டில், 5 செ.மீ., எடப்பள்ளி, கீழ் கோத்தகிரியில் 5 செ.மீ., பர்லியாரில் 1 செ.மீ., குன்னூரில், 1 செ.மீ., மழையளவு பதிவானது. நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மலைபாதையில் காட்டேரி பூங்கா அருகே மண் சரிவுடன் மரங்களும் விழுந்தன.
நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்புத் துறையினர் பொக்லைன் உதவியுடன் அகற்றினர். கடும் மேகமூட்டமும் நிலவி வருகிறது. சீரமைப்பு பணி முடிந்து ஊழியர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்ற போது, திடீரென அதே பகுதியில் பெரிய அளவலான பாறை உருண்டு சாலையில் விழுந்தது. சம்பவ பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பர்லியார் பகுதியில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பஸ் சிக்கிய இடத்தில் சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. குன்னுார் – பர்லியார் இடையே சாலையில் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்திய பின், பஸ் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
