கடும் வெயிலிலும் நுங்கு விற்பனை மந்தம்: சமவெளி வியாபாரி கவலை
கடும் வெயிலிலும் நுங்கு விற்பனை மந்தம்: சமவெளி வியாபாரி கவலை
UPDATED : நவ 19, 2026 07:18 PM
ADDED : நவ 19, 2026 07:16 PM

கோத்தகிரி:
கோத்தகிரி சாலையில் நுங்கு விற்பனை மந்தமாக உள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக அதிகாலை நேரத்தில், பனிப்பொழிவும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவுகிறது. வெயிலில், நுங்கு விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், பொள்ளாச்சியில் இருந்து, நுங்கு வியாபாரிகள் சிலர், சாலை ஓரங்களில் நுங்கு கடைகள் வைத்துள்ளனர்.
குறிப்பாக, கோத்தகிரி ஊட்டி சாலையில், குஞ்சப்பனை, அரவேனு, கோத்தகிரி, ஒரசோலை மற்றும் கார்ஸ்வுட் பகுதிகளில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், மூன்று நுங்கு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, கடுமையான வெயில் அடிப்பதால், கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்களுடன், சுற்றுலா பயணிகளின் வருகை பகல் நேரங்களில் குறைந்துள்ளது. வியாபாரம் மந்தமாக உள்ளது. இதனால், இந்த வாரம், ஐந்து நுங்கு, 100 ரூபாய்க்கும், ஒரு கப் பதநீர், 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சியை சேர்ந்த நுங்கு வியாபாரி அருண் கூறுகையில், ‘‘அதிகாலையில் பஸ் பிடித்து நுங்கு கொண்டு வரும் எங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கிறது. கடந்த வாரம் ஓரளவு வியாபாரம் நடந்தது. தற்போது, வெயில் காரணமாக, ஆட்கள் குறைவாக வருவதால், விற்பனை அந்தளவுக்கு இல்லை, அதனால், 100 ரூபாய்க்கு, ஐந்து நுங்கு விற்பனை செய்கிறோம். போதுமான வருவாய் கிடைக்காததால் நஷ்டம் அடையும் சூழல் உள்ளது,’’ என்றார்.
