/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை வசதி இல்லாத வனப்பகுதி பழங்குடியின கிராமத்தில் எஸ்.ஐ.ஆர்., முகாம் 'தினமலர்' செய்தி எதிரொலி
/
சாலை வசதி இல்லாத வனப்பகுதி பழங்குடியின கிராமத்தில் எஸ்.ஐ.ஆர்., முகாம் 'தினமலர்' செய்தி எதிரொலி
சாலை வசதி இல்லாத வனப்பகுதி பழங்குடியின கிராமத்தில் எஸ்.ஐ.ஆர்., முகாம் 'தினமலர்' செய்தி எதிரொலி
சாலை வசதி இல்லாத வனப்பகுதி பழங்குடியின கிராமத்தில் எஸ்.ஐ.ஆர்., முகாம் 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : நவ 15, 2025 11:08 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே, சாலை மற்றும் வாகன வசதி இல்லாத கிளன்ராக் வனப்பகுதி உள்ள பழங்குடியின கிராமத்தில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து, 12 கி.மீ. தொலைவில், வனப்பகுதிக்கு மத்தியில் கிளன்ராக் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.
இந்த பகுதிக்கு செல்ல சாலை மற்றும் வாகன வசதி இல்லாத நிலையில், 4 கி.மீ., துாரம் மட்டும் கரடு முரடான பாதையில் அவசர காலங்களில் சில வாகனங்கள் மட்டும் சென்று வரும். மீதமுள்ள, 8 கி.மீ., துாரம் வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் பழங்குடியினர் கிராமத்துக்கு நடந்து சென்று வருகின்றனர்.
வெளி ஆட்கள் யாரும் இந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களை சென்று வழங்கும் பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தங்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்படுமோ என்ற ஐயத்தில், அங்கு வாழும் ஐந்து குடும்பத்தினர் வருத்தமடைந்தனர்.
இதுகுறித்து, கடந்த, 14ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா அறிவுரையின்படி, நேற்று வி.ஏ.ஓ., மாரிமுத்து, உதவியாளர் சிவகுமார், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் சுனிதா ஆகியோர், நான்கு கி.மீ., துாரம் வாகனத்தில் சென்றனர். மீதமுள்ள, 8 கி.மீ., துாரம் வனப்பகுதி சாலை வழியாக நடந்து சென்று, கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தினர்.
அப்போது, பழங்குடியினருக்கு விண்ணப்பங்களை வழங்கி, விவரங்களை பதிவு செய்து பெற்றுக் கொண்டனர்.
பழங்குடியினர் கூறுகையில், 'அதிகாரிகள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று, 15 பேரின் விண்ணப்பங்களை பெற்று விபரங்களை தெரிவித்து சென்றது, மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நிச்சயம் தேர்தலில் ஓட்டளிப்போம்,' என்றனர்.

