ADDED : ஆக 16, 2026 05:00 PM
ஊட்டி:
நீலகிரியில் 20ம் தேதி தூய்மைப் பணி நடக்கிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வரும், 20ம் தேதி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த உறுதிமொழி மற்றும் தூய்மை பணி நடக்கிறது.
குறிப்பிட்ட நாளில், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுத்துறை வங்கிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் பொது இடங்கள் உட்பட, மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிலும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.
அதனால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின் பங்களிப்போடு மாவட்ட அளவில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணிக்கு, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
