கடையடைப்பு போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
கடையடைப்பு போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
UPDATED : நவ 02, 2026 06:27 PM
ADDED : நவ 02, 2026 06:25 PM
கோத்தகிரி:
கோத்தகிரியில் கடையடைப்பு போராட்டம், பேச்சு வார்த்தைக்கு பின், வாபஸ் பெறப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நிரந்தரமாக கடை நடத்தி வரும் வியாபாரிகள், ஜி.எஸ்.டி., வரி, சொத்து வரி, தொழில்வரி, குப்பை வரி மற்றும் தொழில் உரிம கட்டணத்தை முறையாக செலுத்தி வருகின்றனர். கடை வாடகை முன்பணம், வேலையாட்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை சந்தித்து வருகின்றனர்,
பண்டிகை காலங்களில் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடை நடத்தி வரும் நிலையில், வெளி ஆட்கள் 'எக்ஸ்போ' என்ற பெயரில் திருமண மண்டபங்களில் ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், நிரந்தரமாக கடை நடத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு கடைகள் நடத்தக்கூடாது என, பல மாவட்டங்களில், ஐகோர்ட்டில் தடை ஆணை உத்தரவு பெற்று, திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் தவிர, வணிக நோக்கில் தற்காலிக கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போல, ‘நீலகிரி மாவட்டத்திலும் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும்,’ என, தமிழ்நாடு வணிகர் பேரவை சார்பில், அதன் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இதனிடையே, ‘கோத்தகிரியில் உள்ள ஒரு பிரபல மண்டபத்தில் வைக்கப்பட்ட 'எக்ஸ்போ' கடையை அப்புறப்படுத்த வேண்டும்; இல்லாத பட்சத்தில், கோத்தகிரி தாலுகா தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்,’ என, காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.
அதன்படி, போராட்டம் நடத்த வியாபாரிகள் ஆயத்தமாயினர். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொருளாளர் லியாகத் அலி மற்றும் தாலுகா வியாபாரிகள் சங்கம் தலைவர் பரணி கேசவன், பொருளாளர் சந்திரன் முன்னிலையில், திருமண மண்டப நிர்வாகத்தினர்களுக்கு இடையே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், கடையை அகற்றுவதாக உறதி அளித்ததை அடுத்து, கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
