ADDED : ஆக 14, 2026 06:22 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 48 மதுக்கடைகள் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், 48 டாஸ்மாக் மது கடைகளில், 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த, 23 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் பூட்டப்பட்டதால், மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குன்னுார் டாஸ்மாக் பணியாளர் தேவ ஞானசேனாதிபதி கூறுகையில்,‘‘ மாநில அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக எங்கள் பிரச்னையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,’’ என்றார்.
