/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டம்
/
ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : செப் 23, 2025 06:16 AM

ஊட்டி; ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி பிரீக்ஸ் பள்ளி ஆசிரியர்கள், இரவில் கடும் குளிரிலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, 150 ஆண்டு காலமாக, பிரீக்ஸ் பள்ளி இயங்கி வருகிறது. 800 மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கவுரவ தலைவராக, நீலகிரி மாவட்ட கலெக்டர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வருவாய்துறை அதிகாரிகள் தலையிட்டு, கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தனர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை பள்ளியில் பணி நேரம் முடிந்த பின், மீண்டும் ஆசிரியர்கள் வகுப்பறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், ஒரு சில நிர்வாகிகள் கலெக்டரை சந்திக்க சென்றும், அவரை பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு, 9:15 மணி அளவில், ஊட்டி தாசில்தார் சங்கர்கணேஷ் சம்பவ பகுதிக்கு சென்று ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அருள் கூறுகையில்,'' தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், எங்கள் கோரிக்கையை தீர்க்க, எழுத்து பூர்வமாக நடவடிக்கை எடுத்தால், போராட்டத்தை கைவிடுவதாக கூறியதை அடுத்து, தாசில்தார், உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவதாக சென்று விட்டார்,'' என்றார். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.