/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழுகிய நிலையில் கிடந்த காட்டு யானை உடல்
/
அழுகிய நிலையில் கிடந்த காட்டு யானை உடல்
ADDED : நவ 13, 2025 08:19 PM
கூடலுார்: முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் அடையாளம் காண முடியாத நிலையில் காட்டு யானை உடல் காணப்பட்டது.
முதுமலை, மசினகுடி வன கோட்டம் சீகூர் ஓடை பகுதியில் நேற்று முன்தினம் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியின் போது, அழகிய நிலையில், எலும்பு கூடாக காட்டு யானை உடல் காணப்பட்டது. அதிகாரிகள் ஆய்வில், யானையின் உடலில் தந்தம் இருந்தன.
தொடர்ந்து, வனத்துறையினர் முன்னிலையில், கால்நடை மருத்துவ குழுவினர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த யானையின் இரண்டு தந்தங்களும், உடலில் இருந்தன. வேட்டையாடுவதற்கான தடயங்கள் ஏதுமில்லை. இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின், இறந்ததற்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.
வனஉயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'முதுமலை, மசினகுடி பகுதியில், யானைகள் இறந்த சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு பின், அழுகிய நிலையில் அல்லது எலும்புக்கூடுகள் மட்டும் கண்டறியப்படுவது சமீபகாலமாக வாடிக்கையாக உள்ளது. இது போன்று கண்டுபிடிப்பது இது, 4வது யானையாகும். இதன்மூலம் கண்காணிப்பில், குறைபாடுகள் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இறந்த யானை குறித்து விபரங்களை, வெளியிடுவதில்,வெளிப்படை தன்மையின்றி செயல்படுவது அதிருப்தி அளிப்பதாக உள்ளது,' என்றனர்.

