UPDATED : நவ 08, 2026 05:12 PM
ADDED : நவ 08, 2026 05:06 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், முதலமடை மா. கம்யூ. கட்சி லோக்கல் கமிட்டி அலுவலகத்தில், செயலாளர் பிரிஜேஷ் தலைமையில், சிலர் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த கட்சித்தொண்டர்கள் சிலர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது, தட்டிக்கேட்க வந்த தொண்டர்களை, செயலாளர் பிரிஜேஷ் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் தலைமைக்கு புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மா. கம்யூ. கட்சியின் பாலக்காடு மாவட்டச் செயலாளர் செந்தாமராக்ஷன், லோக்கல் செயலாளர் பிரிஜேஷ் மற்றும் கட்சித் தொண்டர்களான சூர்யபிரகாஷ், ரஷீத் ஆகிய மூன்று பேரையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
