ADDED : அக் 01, 2026 08:10 AM

கூடலுார்: கூடலுார் அருகே சேதமடைந்துள்ள ஜீன்பூல் தாவர மைய சாலையால் சுற்றுலா பயணிகள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
கூடலுார் நாடுகாணி அருகே அமைந்துள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையம். இதன் நுழைவு வாயில் பகுதி, நாடுகாணி நிலம்பூர் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று வருகின்றனர். நுழைவு வாயிலிருந்து ஜீன்பூல் சந்திப்பு வரை, 1 கி.மீ., துாரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், 100 மீட்டர் துாரம் 'இன்டர்லாக்' பதிக்கப்பட்ட சாலையும், மீதமுள்ள பகுதி தார் சாலையாகவும் உள்ளது.
அதில், தார் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அதில், வாகனங்களை இயக்கவும் நடந்து செல்லவும் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கட்டணம் செலுத்தி வரும் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேரளா சுற்றுலா பயணி ஷாஜி கூறுகையில், ''பராமரிப்பு இல்லாத சாலையில், மழைநீர் தேங்கி தொடர்ந்து சேதமடைந்து வருகிறது.
சாலையில் நடந்து செல்லவும் வாகனங்கள் இயக்கவும் சிரமமாக உள்ளது. இச்சாலையை கோடை சீசனுக்கு முன் சீரமைக்க வேண்டும்.
இல்லையெனில், இப்பகுதியை காண ஆர்வமுடம் வரும் பலர் திரும்ப செல்லும் நிலை ஏற்படும். நுழைவு கட்டணம் வாங்கியும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஏற்க முடியாது,'' என்றார்.
