/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு : வன ஊழியர்களுக்கு பயிற்சி
/
புலிகள் கணக்கெடுப்பு : வன ஊழியர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 04, 2025 08:49 PM

கூடலூர்: -கூடலுார், நீலகிரி வனக்கோட்டங்களில் நடைபெற உள்ள புலிகள் கணக்கெடுப்பு குறித்து, வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேசிய புலிகள் ஆணையத்தின் சார்பில் 2026ல், அகில இந்திய புலிகள் மதிப்பீடு குறித்து தென் மண்டல அளவிலான புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், செப்., 24 முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்ட வன ஊழியர்களுக்கு, புலிகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் நேற்று, நடந்தது.
முகாமுக்கு, ஜீன்பூல் வனச்சரகர் ரவி தலைமை வகித்தார். மாமிச உண்ணிகளை நேரடியாக பார்ப்பது அதன் கால் தடம், எச்சம் கொண்டு கணக்கெடுக்கும் முறைகள், கணக்கெடுப்பு விவரம் பதிவு ஏடுகள் மற்றும் மொபைல் போன் செயலியில் பதிவு செய்யும் முறைகள் குறித்து, உயிரியலாளர்கள் பழனிசாமி, விமல் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
முகாமில் வனச்சரகர்கள் சஞ்சீவ், வீரமணி, அய்யனார் மற்றும் வன ஊழியர்கள் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி வனக்கோட்டம், முக்கூருத்தி தேசிய பூங்கா வன ஊழியர்களுக்கான புலிகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் நடந்தது. உயிரியலாளர்கள் சந்தோஷ்குமார், கார்த்திக், சாந்தகுமார் ஆகியோர் புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறைகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பயிற்சி முகாமை தொடர்ந்து, அடுத்த மாதம், புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள், 8 நாட்கள் நடைபெறும்' என்றனர்.

