/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலர் பூங்காவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.70 கோடி என்னாச்சு? ஓராண்டாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தி
/
மலர் பூங்காவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.70 கோடி என்னாச்சு? ஓராண்டாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தி
மலர் பூங்காவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.70 கோடி என்னாச்சு? ஓராண்டாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தி
மலர் பூங்காவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.70 கோடி என்னாச்சு? ஓராண்டாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தி
ADDED : அக் 30, 2025 10:57 PM

கூடலூர்: கூடலூர் அருகே, 'மலர் பூங்கா'  அமைக்க மத்திய அரசு, 70  கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவில், சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்தில் உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நமது தேசத்தின் கலாசாரத்தினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், 23 மாநிலங்கள் உள்ளடங்கிய சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில், தமிழகம் இடம்பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், தேவாலா மலர் பூங்கா தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கு, 70 கோடி ரூபாய் நிதியை கடந்த நவ., மாதம் பிரதமர் ஒதுக்கி அறிவித்தார்.
இப்பூங்கா, கூடலூர் பொன்னூர் தோட்டக்கலை பண்ணையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் வாயிலாக  கூடலூரில் சுற்றுலா வளர்ச்சி அடைவதுடன், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மக்கள் வரவேற்றுள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 45 ஆண்டுகளுக்கு மேலாக, 200 ஏக்கரில் தோட்டக்கலை நிர்வாகத்தின் கீழ்  செயல்பட்டு வரும், பண்ணை பகுதி வருவாய் துறை பதிவேட்டில் அப்பகுதி 'காடு' என, இருப்பதாகவும், வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்கவில்லை என, கூறி, மலர் பூங்காவை, கூடலூரிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, இத்திட்டம் ஊட்டிக்கு மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு, கூடலூரில் ஏற்கனவே அறிவித்த இடத்தில் மலர் தோட்ட பூங்கா அமைக்கப்படும்.
இதேபோன்று ஊட்டியிலும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்' என, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.  இதுவரை பணிகள் துவங்கவில்லை. நிதி ஒதுக்கி ஓராண்டாகியும்   பணிகள் துவங்குவதற்கான அறிவிப்பு கூட இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த, மத்திய அரசு, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஓராண்டாகிவிட்டது. இடம் தேர்வு  தொடர்பான அரசு துறையினர் இடையே உள்ள பிரச்னைகளால், பணிகள் இதுவரை துவங்கவில்லை.
எனவே, மாநில அரசு, இப்பிரச்னைக்கு துறை ரீதியாக தீர்வு கண்டு, கூடலூரில்  சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஏற்கனவே அறிவித்தபடி, பொன்னூர் தோட்டக்கலைப் பண்ணையில் மலர் தோட்டம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும். இதன் வாயிலாக கூடலூரில் சுற்றுலா வளர்ச்சி பெறும்; பொருளாதாரம் மேம்படும்' என்றனர்.

