பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை: நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்
பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை: நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்
UPDATED : நவ 17, 2026 07:36 PM
ADDED : நவ 17, 2026 07:32 PM

கூடலுார்: ‘கூடலுார் அருகே காட்டு யானை சேதப்படுத்திய பாக்கு மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில் குடியிருப்பை ஒட்டிய வனத்தில் முகாமிடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை, வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் வாகன கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுார் நகரை ஒட்டிய ஏழுமுறம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த காட்டு யானை, ஜெயக்குமார் என்பவர் விவசாய தோட்டத்தில் ஏராளமான பாக்கு மரங்களையும், காபி செடிகளை சேதம் செய்து சென்றது. பல ஆண்டுகள் வருவாய் தரக்கூடிய பாக்கு மரங்களை யானை சேதம் செய்ததால் நஷடம் ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் கூறுகையில்,‘இப்பகுதியில், இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும். தற்போது சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
