/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் ஓய்வெடுத்த காட்டு யானைகள்
/
பூங்காவில் ஓய்வெடுத்த காட்டு யானைகள்
ADDED : ஜன 21, 2025 11:30 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் பகுதியில் உள்ள பூங்காவில் காட்டு யானைகள் முகாமிட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டிய, குருசுமலை, கிளன்ராக் வனப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக, கட்டைகொம்பன் மற்றும் மக்னா யானைகள் ஜோடியாக முகாமிட்டு, இரவு நேரங்களில் இரும்பு பாலம் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,10:00 மணிக்கு, பந்தலுார் பஜார் பகுதியின் பின்புறத்தில் உள்ள நகராட்சியின் பூங்காவில் முகாமிட்டன. அங்குள்ள பாக்கு மரங்களை உடைத்து ருசித்ததுடன் உலா வந்தன.
பின்னர், புனித சேவியர் ஆரம்பப்பள்ளி வளாகம் வழியாக, கூவமூலா பழங்குடியினர் கிராமத்திற்கு சென்றன. கிராமத்தை ஒட்டிய புதர் பகுதியில் இரண்டு யானைகளும் முகாமிட்டு உள்ளதால், இந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'இந்த யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானைகளை அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.