/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் வாகனத்தை நிறுத்தி காய்கறி உட்கொண்ட காட்டு யானைகள்
/
சாலையில் வாகனத்தை நிறுத்தி காய்கறி உட்கொண்ட காட்டு யானைகள்
சாலையில் வாகனத்தை நிறுத்தி காய்கறி உட்கொண்ட காட்டு யானைகள்
சாலையில் வாகனத்தை நிறுத்தி காய்கறி உட்கொண்ட காட்டு யானைகள்
ADDED : நவ 11, 2025 10:10 PM
கூடலுார்: தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா அருகே, பந்திப்பூர் சாலையில் காட்டு யானைகள் வாகனத்தை வழிமறித்து, காய்கறியை உட்கொண்ட சம்பவத்தால் ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள், ஓட்டுனர்கள், காலையில் முதுமலை வழியாக, கர்நாடக மாநிலம் குண்டல்பேட், மைசூரு சென்று, காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து மாலை மற்றும் இரவு திரும்பி வருகின்றனர்.
நேற்று முன்தினம், இரவு இவ்வாறு காய்கறி ஏற்றி வந்த 'பிக்-அப்' வாகனத்தை, தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா அருகே பந்திப்பூர் புலிகள் காப்பக சாலையில், இரண்டு காட்டு யானைகள் வழிமறித்து அதிலிருந்து காய்கறிகளை எடுத்து உண்ண துவங்கின. ஓட்டுனர் அச்சத்துடன் வாகனத்தில் இருந்துள்ளார். வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த வழியாக வந்த ஓட்டுனர்கள் சப்தமிட்டு, யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. நிம்மதி அடைந்த ஓட்டுனர் வாகனத்தை எடுத்து சென்றார். தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இச்சம்பவத்தால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரங்களில், சாலையில் மெய்ச்சலில் ஈடுபடும் யானைகளில், சில யானைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளது. எனவே, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். இரவில், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

