ADDED : ஆக 18, 2025 01:55 AM

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே புல்வயல் கிராம வனப்பகுதியில், பேராசிரியர் முத்தழகன், வரலாற்று ஆர்வலர் நாராயணமூர்த்தி குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரணி கரையில், எழுத்து பொறிப்புடன் கூடிய கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது.
பேராசிரியர் முத்தழகன் கூறியதாவது:
இரண்டரை அடி உயரமும், 1.25 அடி அகலமும் கொண்ட இந்த கற்பலகையில், 14 வரிகளில் கல்வெட்டு எழுதபட்டுள்ளது. கல்வெட்டில், துன்முகி ஆண்டு, ஆனி ஐந்தாம் நாள் தென்கோனாட்டு சுந்தரசோழபுரத்து பெருமங்லமுடையான் செலுந்தார் சிதம்பர நாதர் என்பவர், வயலகநாட்டு புல்வயலுாரில் தன் பெயரில் இந்த ஊரணியை வெட்டிய செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது.
எழுத்தமைதியை கொண்டு, கல்வெட்டானது, கி.பி., 18ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். துன்முகி ஆண்டு குறிக்கப்படுவதால், கல்வெட்டானது கி.பி., 1776ம் ஆண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. கல்வெட்டில் புல்வயல் கிராமமானது, வயலகநாட்டு புல்வயலுார் என, குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் தொன்கோனாட்டு சுந்தரசோழபுரம் என்பது, தற்போது செவ்வலுார் அருகே உள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தை குறிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.