/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரம்பரிய பனை ஓலை கொழுக்கட்டைக்கு மவுசு; கிராம கோயில்களில் படையல்
/
பாரம்பரிய பனை ஓலை கொழுக்கட்டைக்கு மவுசு; கிராம கோயில்களில் படையல்
பாரம்பரிய பனை ஓலை கொழுக்கட்டைக்கு மவுசு; கிராம கோயில்களில் படையல்
பாரம்பரிய பனை ஓலை கொழுக்கட்டைக்கு மவுசு; கிராம கோயில்களில் படையல்
UPDATED : ஆக 20, 2024 05:02 PM
ADDED : ஆக 20, 2024 07:26 AM

ஆர்.எஸ்.மங்கலம் : கிராமப்புற கோயில் விழாக்களில் பாரம்பரியமிக்க பனை ஓலை கொழுக்கட்டை தயார் செய்து சுவாமிக்கு படையலிட்டு உண்பது தற்போது பரவலாக அதிகரித்துள்ளது.
பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பொருட்களும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் மருத்துவ குணம் உடையதாகவும் விளங்குகிறது.
பனையில் இருந்து பனை நுங்கு, கிழங்குகள், பதநீர் மட்டுமின்றி, அதன் ஓலையில் இருந்து பாய், விசிறி, பெட்டிகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.
அந்த வகையில் பனை மரத்தின் குருத்தோலையில் இருந்து பனை ஓலை கொழுக்கட்டை தயாரிப்பதில் நமது முன்னோர்கள் கை தேர்ந்தவர்கள். குறிப்பாக தென் தமிழகத்தில் வீடுகளில் திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களின் போது கன்னியாகுமாரி, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பனை ஓலை கொழுக்கட்டை தயார் செய்து சுவாமிக்கு படைக்கின்றனர்.
அந்த வகையில் சமீப காலமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முளைப்பாரி விழாவின் போது பனை ஓலை கொழுக்கட்டை தயார் செய்து சுவாமிக்கு படையலிட்டு விருந்தினர்களுக்கு பனை ஓலை கொழுக்கட்டை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நகர் பகுதிகளில் வசிப்பவர்களிடையே பனை ஓலை கொழுக்கட்டைக்கு மவுசு ஏற்பட்டு வருகிறது. பனை ஓலை கொழுக்கட்டை என்பது அரிசி மாவு மற்றும் பனை வெல்லம் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
பனை மரத்தின் இளம் குருத்தோலையை சுத்தம் செய்து நான்கு முதல் ஐந்து அங்குலம் உள்ள நடுப்பகுதிகளை துண்டு துண்டாக வெட்டி அதன் இடையில் தயார் செய்யப்பட்ட மாவை வைத்து ஓலைகளை மூடி பிறகு இட்லி தட்டில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீராவியில் வேக வைத்தால் சுவை மிகுந்த பனை ஓலை கொழுக்கட்டை தயாராகிறது.
கொழுக்கட்டையில் பச்சை பனை ஓலை வாசனையும், அதில் உள்ள பச்சையும் நாம் உண்ணும் கொழுக்கட்டையில் சேர்வதால் அதிக சுவை, மணம் உள்ளதாக மாறி உண்போரை மெய் மறக்க செய்வது பனை ஓலை கொழுக்கட்டையின் சிறப்பாக உள்ளது.
நமது முன்னோர்கள் இதுபோன்று பல்வேறு உணவுகளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு உணவுப் பொருட்களை இன்றைய இளைய தலைமுறை நாடிச் சென்று உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை அனைவரும் பின்பற்றி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

