/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தார்ப்பாயால் தப்பிய உப்பு குவியல்
/
தார்ப்பாயால் தப்பிய உப்பு குவியல்
ADDED : நவ 25, 2025 05:19 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆனைகுடி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் உப்பளங்களில் உப்பு குவியல் கரையாமல் இருக்க 20 முதல் 30 அடி நீளம், அகலம் உள்ள தார்பாயால் மூடி பாதுகாத்து வருகின்றனர்.
மழையில்லாத காலங்களை கணக்கிட்டு சரக்கு வாகனங்களில் உப்பை ஏற்றி அனுப்பி வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் உப்பு கரையாமல் இருக்கவும் கட்டி ஆகாமல் பாதுகாக்கவும் பாதுகாப்பு முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட இடங்களில் உற்பத்தி செய்யும் உப்பு உணவுக்காகவும், ரசாயன தொழிற்சாலைகளுக்கும், தோல் பதனிடுதல், கருவாட்டு கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் சென்னை, மதுரை, துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து உப்பு சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
வெயில் காலங்களில் டன் உப்பு ரூ. 2000, மழைக் காலங்களில் ரூ.2500 முதல் 3000 வரை விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் விளைந்த உப்பை முறையாக குன்று போல் அமைத்து கொட்டி பாதுகாக்கின்றனர்.
ஈரப்பதமான காற்று உள்ளிட்டவைகளில் இருந்து பாதிப்பை தடுக்க அவற்றின் மீது மணல் மூடைகளை கயிறு கட்டி இருபுறமும் இணைத்துள்ளனர்.
பெரும்பாலான உப்பள பாத்திகளில் மழை நீர் புகுந்துள்ளதால் தற்சமயம் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழை காலம் நிறைவடைந்த பிறகு கோடை காலத்தை கணக்கிட்டு உப்பளங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

