/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயில்களில் அன்னாபிேஷக வழிபாடு
/
சிவன் கோயில்களில் அன்னாபிேஷக வழிபாடு
ADDED : நவ 05, 2025 08:57 PM

ராமநாதபுரம்: அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் முக்கியமான வழிபாடு.
வடித்த பச்சரிசி சாதத்தை இளஞ்சூடாக லிங்கத்தின் மீது முழுமையாக பரப்பி அலங்காரம் செய்யப்படும். அவற்றின் மீது பல வகையான காய்கறிகளை வரிசையாக அடுக்கி காட்சிப்படுத்தி அலங்காரமாக வடிவமைக்கப்படும்.
அன்னாபிஷேகம் சிவபெருமானுக்கு படைக்கப்படும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி அன்ன பிரசாதம் பெறுவதால் உணவு பஞ்சம் நீங்கி வருடம் முழுமையும் செல்வம் பெருகும் என்பதை நம்பிக்கை. தெப்பக்குளம் உள்ள கோயில்களில் அன்னாபிஷேகத்தின் ஒரு பகுதியை நீர் நிலைகளில் வாழும் மீன்களுக்கு சேர்ப்பது வழக்கம்.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட சிவன் கோயில்களில் அன்னாபிேஷக வழிபாடுகள் நடந்தது.
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மூலவருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து அன்னம், காய்கறிகள் அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. இதே போல வெளிபட்டணம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், குமரய்யா கோவில் ரோட்டில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில், வினைதீர்க்கும் வேலவர் கோயில் ஆகிய இடங்களில் சிவபெருமான், அம்மனுக்கு அன்ன அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மூலவருக்கு பச்சரிசி சாதத்தால் முழுவதும் சாற்றப்பட்டது.
காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
முன்னதாக உப்பில்லாத பச்சரிசி சாதம் வடிக்கப்பட்டு சிவபெருமானின் திருமேனியில் சாற்றப்பட்டது.
வண்ணாங்குண்டு அருகே குச்சிலிய மடத்தில் மகா முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் தனி சன்னதி கோயிலான நாகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு மதியம் 1:00 மணிக்கு மூலவருக்கு பச்சரிசி சாதம் அலங்காரம் செய்யப்பட்டு காய்கனி மலர்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. பூஜைகளை ராமேஸ்வரம் சிவமுரளி, சிவமூர்த்தி, கலைசெல்வன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெருநாழி அருகே டி.எம்.கோட்டையில் செஞ்சடைநாதர் சமேத கருணகடாட்சி அம்மன் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
மூலவர் செஞ்சடை நாதருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பச்சரிசி சாதத்தால் சிவ பெருமானின் திருவுருவம் வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகளை டி.எம். கோட்டை கோயில் ஸ்தானிகர் நாகநாத குருக்கள் செய்திருந்தார்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசி விஸ்வநாதர் கோயில்களில் நேற்று அன்னாபிேஷகம் நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

