/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 16, 2025 03:24 AM
ராமநாதபுரம்: தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாரதி நகர் வரை 2 கி.மீ.,க்கு ஊர்வலம் நடந்தது.
குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சிறுவர், சிறுமியர் ஊர்வலம் சென்றனர்.
சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் மேள தாளம் மூலம் குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக குழந்தைகள் தின ஊறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏ.எஸ்.பி., பாலசுந்தர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் மாடசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா, மாவட்ட சமூகநல அலுவலர் ரூபிணி, வட்டார தொழிலாளர் நல அலுவலர் சுமதி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கலா, தொண்டு நிறுவன இயக்குநர்கள் பங்கேற்றனர்.
* திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கதிரவன் வரவேற்றார். திருவாடானை ஸ்டேட் பாங்க் மேலாளர் கிறிஸ்து ஜெயன்ராஜ் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், அவசியம், சிக்கனம், சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெற்றோரிடம் சரியானவற்றை மட்டும் கேட்டு பெற வேண்டும்.
இப்பள்ளிக்கு ஸ்டேட் பாங்க் சார்பில் புரஜெக்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

