/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் நெல் சாகுபடி பணியில் செலவு அதிகரிப்பு: ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் செலவாகிறது

ADDED : நவ 07, 2025 03:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது. நடப்பு ஆண்டில் யூரியா, பூச்சிகொல்லி மருந்துகள் விலை, வேலை ஆட்கள் கூலி உயர்வால் கடந்த ஆண்டை காட்டிலும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மாவட்டத்தில் மானாவாரியாக கண்மாய் பாசனத்தில் ஆண்டு தோறும் 3 லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி நடக்கிறது. வட கிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாக ஆடிப்பெருக்கில் வயலை உழவு செய்து தயார் செய்து செப்.,ல் நெல் விதைக்கின்றனர். கடந்த அக்.,ல் பெய்த மழையால் தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன.
களையெடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கண்மாய் கரை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பூச்சிக் கொல்லி மருந்து, ஆட்கள் கூலி உயர்வால் இவ்வாண்டு நெல் சாகுபடிக்கு கூடுதல் செலவாகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அச்சுந்தன் வயலை சேர்ந்த விவசாயி கோபால் கூறுகையில், மழை பெய்துள்ளதால் எங்கள் பகுதியில் நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன. களையெடுப்பு, உரமிடும் பணி மும்முரமாக நடக்கிறது. நடப்பு ஆண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கடைகளில் யூரியா உரம் மூடைக்கு ரூ.100ம், பூச்சிக்கொல்லி மருந்து லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை விலை அதிகரித்துள்ளது. ஆட்கள் கூலியும் ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.35 முதல் 40 ஆயிரம் செலவான இடத்தில் தற்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றார்.