ADDED : நவ 02, 2024 08:17 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் மற்றும் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு குறித்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மழைக்காலம் துவங்கி உள்ளதால் காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், ஆட்டு உரல்கள் உள்ளிட்ட திறந்த வெளியில் வைக்கப்பட்ட பொருள்களின் மீது மழை நீர் தேங்குகிறது.
நாளடைவில் மழை நீரில் இருந்து லார்வா கொசுப் புழு உற்பத்தியாகி அவற்றிலிருந்து டெங்கு கொசுக்கள் உருவாகி நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்த வெள்ளை அணுக்கள் வெகுவாக குறைந்து பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே பழைய இரும்பு கடைகள் உள்ளவற்றில் உள்ள பயன்படாத பொருட்கள் மீது அதிக அளவு மழை நீர் தேங்குகிறது.
அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். முன்பு வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். தற்போது இந்தப் பணி முடங்கி உள்ளது. எனவே மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
திறந்த நிலை கிணறுகளில் அபேட் மருந்து தெளித்தும், குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்தவும், ஊராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து உரிய வழிகாட்டுதலை சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் ஏற்படுத்த வேண்டும்.

