UPDATED : நவ 09, 2026 04:02 PM
ADDED : நவ 09, 2026 03:59 PM
திருப்புல்லாணி: தீபாவளி பண்டிகை முடிந்து ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை (முதல் நாள்) திதி அன்று விரதம் துவங்குகிறது. கந்த சஷ்டி விழாவில் பங்கேற்கவும், அதற்குரிய பூஜையில் ஈடுபடவும் பக்தர்கள் பெருமளவு தயாராகி வருகின்றனர். காலை முதல் உபவாசம் இருந்து மாலையில் முருகன் வழிபாடு முடிந்தவுடன் ஒருவேளை மட்டும் உணவு மற்றும் பால், பழம் ஆகிவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
விரதம் துவங்கும் நாள் காலை முதல் மறுநாள் சப்தமி திதி காலை சூரிய உதயம் வரை தண்ணீரைத் தவிர வேறு எதுவும் அருந்தாமல் முருக நாமத்தை சொல்லி விரதம் இருக்கின்றனர். பக்தர்கள் கூறியதாவது:
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. கண் திருஷ்டி, பயம் மற்றும் எதிர்ப்புகள் நீங்கி தைரியமும், வெற்றி மனப்பான்மையும் உண்டாகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அல்லது ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் விரதம் இருப்பதால் திருமண தடை அகலும்.
கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், சண்முக கவசம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். ஓம் சரவணபவ அல்லது ஓம் முருகா என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர வேண்டும் என்றனர். திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கும் செல்வதற்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். உள்ளூரில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
