ADDED : அக் 19, 2025 09:28 PM
வாலிநோக்கம்: வாலிநோக்கம் சுற்றுவட்டார கிராமங்களை சுற்றி பத்திற்கும் அதிகமான தடுப்பணைகள் உள்ளன. 2018 முதல் 2022 வரை கட்டப்பட்ட தடுப்பணைகளை சுற்றிலும் அவற்றின் வழித் தடங்களில் சீமைக் கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகளவு உள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான தடுப்பணைகள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.
காலம் காலமாக வயல்வெளிகளுக்கு சென்று கொண்டிருந்த நீர் வழித்தடங்கள் மற்றும் ஓடையின் நடுவே குறிப்பிட்ட துாரம் இடைவெளியில் ஏராளமான தடுப்பணைகளை அமைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் பல நுாறாண்டு காலமாக வழிந்து ஓடிய ஓடை நீர் முறையாக வயல்வெளிகளுக்கு செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் தடுப்பணைகளால் எவ்வித பயனும் இல்லை.
பெரும்பாலான தடுப்பணைகள் தரமற்ற கட்டுமானப் பணிகளால் சேதமடைந்துள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு செல்லக்கூடிய நீர் அடைபட்டுள்ளதாலும் உரிய காலத்தில் வரக்கூடிய நீர் தேங்கியிருப்பதாலும் விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்காமல் பல இடங்களில் தடுப்பணை காட்சி பொருளாகவே உள்ளது என்றனர்.