ADDED : டிச 03, 2024 05:24 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள ஜல்லிமலை மற்றும் ஜல்லிமலை தெற்கு பகுதியில் குடியிருக்கும் மக்கள் வசதிக்காக 9 இடங்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படுகிறது. இப்பணியை தனியார் ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கிய நிலையில் ரோடு பணிக்கு எம் சாண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்த திட்ட அறிக்கையில் நகராட்சி தெரிவித்துஉள்ளது.
ஆனால் நகராட்சி உத்தரவை மீறி ஜல்லிமலை தெருவில் எம் சாண்ட்வுடன் சவடு மணலை கலந்து ரோடு பணிக்கு பயன்படுத்துகின்றனர். ராமேஸ்வரம் பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதியில் சவடு மணல் எடுக்க அரசு அனுமதி இல்லை.
இந்நிலையில் விதி மீறி சவடு மணலை பயன்படுத்துவதை தடுக்காமல் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இந்த சவடு மணலை அள்ளவும், ரோடு பணிக்கு பயன்படுத்தவும் யார் அனுமதி கொடுத்தது என நகராட்சி அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோடுபணிக்கு சவடு மணல் பயன்படுத்த அனுமதி இல்லை. இருப்பினும் சவடு மணல் பயன்படுத்தியது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.