வெளியூர் வியாபாரிகளை குறிவைத்து ராமேஸ்வரத்தில் கடைகள் அமைப்பு
வெளியூர் வியாபாரிகளை குறிவைத்து ராமேஸ்வரத்தில் கடைகள் அமைப்பு
UPDATED : நவ 10, 2026 06:41 PM
ADDED : நவ 10, 2026 06:36 PM

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் வெளியூர் வியாபாரிகளை குறிவைத்து சிலர் கடைகள் அமைத்து கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா வை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நவ., 20 முதல் ஜன., 30 வரை ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்வார்கள். இவர்களுக்காக ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றிலும் உள்ளூர் பிரமுகர்கள் நுாறுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதில் ஒரு கடைக்கு ராமேஸ்வரம் நகராட்சிக்கு ரூ.7000 கட்டணத்தை உள்ளூர் பிரமுகர்கள் செலுத்தி விட்டு மதுரை, சேலம், ஈரோடு, பெங்களூருவை சேர்ந்த வியாபாரிகளை குறிவைத்து ஆக்கிரமித்த கடைகளை ஒப்படைகின்றனர். இதற்காக வியாபாரிகளிடம் கடைக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர்.
அரசுக்கு ரூ.7000 வரி செலுத்தி விட்டு உள்ளூர் பிரமுகர்கள் பெரும் லாபம் அடைவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தனி நபர்கள் அதிக வருவாய் ஈட்டுவதை கண்டு மேலும் பலர் கடைகள் அமைக்க கங்கணம் கட்டுகிறார்கள். இதனால் பஸ் ஸ்டாண்ட் அருகில் முதியோர் இல்லம் முன்பும் ஆக்கிரமித்துள்ளதால் முதியோர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் டிரான்ஸ்பார்மர் அருகில் கடைகள் அமைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தனியார் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட வேண்டும். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
