/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் ஜெயந்தி விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
/
தேவர் ஜெயந்தி விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ADDED : அக் 28, 2025 03:44 AM

கடலாடி: கடலாடி நகர் தேவர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட தேவர் மகாலில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலின் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா, 63 வது ஆண்டு குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பத்து நாட்களும் சிறப்பு பூஜைகளும், நாடகம், விளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கடலாடி -- முதுகுளத்துார் சாலையில் பந்தய துாரம் எல்லை நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடந்தது. பங்கேற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி தங்களது காளைகளை ஓட்டிச் சென்றனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகளும், ஆட்டுக்கிடாய்கள், அண்டா, குத்துவிளக்கு, சுழல் கேடயம் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். கடலாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை, நகர் தேவர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

