/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தாலுகாவில் இடியும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்
/
திருவாடானை தாலுகாவில் இடியும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்
திருவாடானை தாலுகாவில் இடியும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்
திருவாடானை தாலுகாவில் இடியும் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள்
ADDED : நவ 04, 2025 10:13 PM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களின் கூரை பெயர்ந்து விழுவதால் அச்சத்துடன் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் நான்கு பிர்கா, 61 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராம மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் தங்கி பணியாற்ற அலுவலகங்கள் கட்டப்பட்டது. பொதுமக்கள் பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பழங்குளம் குரூப் வி.ஏ.ஓ., கட்டட சிமென்ட் பூச்சு விழுந்ததால் ஒரு விவசாயிக்கு காயம் ஏற்பட்டது. மழைக்காலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் வெள்ளையபுரம், எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பணியாற்றுகின்றனர். கிராம மக்கள் அவர்களை தேடி அலைவதால் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து வி.ஏ.ஓ., சங்க மாவட்ட கவுரவ தலைவர் நம்பு ராஜேஷ் கூறியதாவது:
வி.ஏ.ஓ., அலுவலகங்கள் சேதமடைந்ததால் பல்வேறு வேலையாக வரும் மக்கள் அச்சமடைந்தனர். ஆவணங்களையும் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வி.ஏ.ஓ.,க்கள் சம்பந்தப்பட்ட குரூப்களுக்கு அருகில் உள்ள ஊர்களில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

