/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பெருகி வரும் புள்ளி மான்களை பாதுகாக்க வேண்டும்; விபத்து பலியை தடுக்க கணக்கெடுப்பு அவசியம்

ADDED : அக் 01, 2025 08:09 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்ந்த சீமைக்கருவேல மரக்காடுகளுக்குள் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை போதிய பாதுகாப்பற்ற நிலையில் வேட்டை நாய்கள் தாக்கியும், விபத்தில் சிக்கியும் பலியாவது தொடர்வதால் பறவைகள் கணக்கெடுப்பு போன்று ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடத்தி மான்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமுதி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி, ராமநாதபுரம், திருவாடானை, நயினார்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் வாழ்கின்றன. போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் இந்த மான்கள் அவ்வப்போது தாகம் தீர்ப்பதற்காக ஊருணிகள், கண்மாய்களை நாடி நெடுஞ்சாலை பகுதிகளை நோக்கி வந்து செல்கின்றன.
பரமக்குடி அருகே நயினார்கோவில், வாணியவல்லம், அண்டக்குடி, கீழப்பெருங்கரை, சூடியூர் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் காணப்படுகின்றன. தண்ணீர் தேடி வரும் மான்கள் சில வாகனங்களில் அடிபடுவதும், நாய்கள் துாரத்தி காயமடைந்து பலியாகின்றன. 2021ல் மட்டும் 11 பெண் மான்கள் உட்பட 26 புள்ளி மான்கள் இறந்து விட்டன. இதே போன்று ஆண்டுதோறும் 10 முதல் 20 புள்ளி மான்கள் பலியாகின்றன.
புள்ளி மான்கள் பாதுகாப்பு விஷயத்தில் பெயரளவில் வனத்துறையினர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மான்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தண்ணீர் தொட்டி, மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பறவைகள் கணக்கெடுப்பு போன்று ஆணடுதோறும் மான்கள் கணக்கெடுப்பு நடத்தி அழிந்து வரும் மான் இனத்தை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---