ADDED : அக் 01, 2026 12:24 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மயானத்தில் இருந்த வயர் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மயானம் அருகே எரிவாயு தகன மேடை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. அதில் கே.கே., நகரை சேர்ந்த விக்னேஷ் பணி புரிகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் தனுஷ், அங்குள்ள அறையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறி சென்றுள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனுஷ் செல்லாமல் அதே பகுதியில் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் மறுநாள் காலை வந்து பார்த்த போது காப்பர் வயர்கள் மற்றும் இரும்புப் பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரித்ததில் அறையில் படுத்திருந்த தனுஷ் திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து வயர் மற்றும் இரும்பு பொருட்களை
பறிமுதல் செய்தனர்.
