ADDED : செப் 29, 2026 03:13 PM
திருவாடானை: கோயில் திருவிழாக்களில் சிலிர்க்க வைக்கும் வாண வேடிக்கையில் வாலிபர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு வெடிக்க வைக்கின்றனர். கோயில் திருவிழாக்கள் என்றாலே பக்தர்களின் கோஷங்கள், மேள தாளங்கள், மின் விளக்குகளின் அலங்காரம் ஆகியவற்றை தாண்டி அண்ணாந்து பார்த்து வியக்கவைப்பது வாண வேடிக்கை. இதில் வாலிபர்களின் அசாத்திய துணிச்சலும், அச்சமில்லாமல் செயல்படும் விதம் அடங்கியுள்ளது. வெடியின் திரியில் தீயை பற்ற வைத்து அடுத்த நொடியே அது கையில் இருக்கும் போதே பொறிகள் பறக்கும்.
அடுத்த 1 அல்லது 2 நொடியில் அதை லாவகமாக வானத்தை நோக்கி உயரே துாக்கி வீச வேண்டும். சற்று தாமதித்தாலோ, கவனம் சிதறினாலோ அல்லது தடுமாறினாலோ கைவிரல்களை பாதிக்கும். ஆனால் அந்த இளைஞர்கள் சிறிதும் அச்சமின்றி இதில் ஈடுபடுகிறார்கள். சற்றும் பதட்டமடையாமல் சரியான கணக்கில் அதை வானத்தை நோக்கி வீசும் வாலிபர்களின் துணிச்சலை கண்டு திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வியப்படைகிறார்கள்.
––
