/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கர்நாடக பஸ் - இரு லாரிகள் மோதல் 4 பக்தர்கள் பலி; 30 பேர் படுகாயம்
/
கர்நாடக பஸ் - இரு லாரிகள் மோதல் 4 பக்தர்கள் பலி; 30 பேர் படுகாயம்
கர்நாடக பஸ் - இரு லாரிகள் மோதல் 4 பக்தர்கள் பலி; 30 பேர் படுகாயம்
கர்நாடக பஸ் - இரு லாரிகள் மோதல் 4 பக்தர்கள் பலி; 30 பேர் படுகாயம்
ADDED : ஜன 10, 2025 02:25 AM

ராணிப்பேட்டை:கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்த, 120 பக்தர்கள், தமிழக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, மூன்று கர்நாடக அரசு பஸ்களில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு வந்தனர்.
அன்றைய தினம், சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் அதே பஸ்சில் அன்றிரவு 11:30 மணிக்கு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் எமரால்டு நகர் அருகே பஸ்கள் சென்றபோது, இரண்டு பஸ்கள் முன்னால் சென்ற நிலையில், மூன்றாவதாக வந்த பஸ், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.
அப்போது, எதிரே சென்னை நோக்கி சென்ற காய்கறி லோடு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
அப்போது பஸ்சின் பின்னால் வந்த லாரியும் மோதியதால், பஸ் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில், கர்நாடக அரசு பஸ்சில் வந்த, சோமசேகர், 30, கிருஷ்ணப்பா, 65, மற்றும் காய்கறி லாரி டிரைவரான மஞ்சுநாத், 31, கிளீனர் சங்கரா, 32, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், பஸ்சில் வந்த பக்தர்கள், 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பல மணி நேரத்துக்கு பின் போக்குவரத்தை சரிசெய்தனர்.
விபத்தில், காய்கறி லோடு லாரி கவிழ்ந்ததில், 16 டன் காய்கறிகள் சாலையில் கொட்டி சிதறின. இவற்றை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.

