ADDED : அக் 01, 2026 12:06 AM

நெமிலி: நெமிலி அருகே, நில மோசடி வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன், 44, கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன். இவர், 2024ல், சிறுவளையத்தை சேர்ந்த முனுசாமி, 54, என்பவரிடம், 40 சென்ட் நிலத்தை, 25 லட்சம் ரூபாய்க்கு வாங்க, 5 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கியுள்ளார்.
மீதமுள்ள, 20 லட்சம் ரூபாயை பின்னர் வழங்குவதாக கூறி, நிலத்தை பதிவு செய்துள்ளார். அதன் பின், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று, குமரேசன் மோசடி செய்துள்ளார்.
மேலும், வேலுார், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று பல கோடி ரூபாய்க்கு மேல் குமரேசன் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவில் முனுசாமி அளித்த புகாரில், நேற்று முன்தினம் குமரேசன் கைது செய்யப்பட்டார்.
