/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆசிரியை இடமாற்றத்தால் கதறி அழுத மாணவர்கள்
/
ஆசிரியை இடமாற்றத்தால் கதறி அழுத மாணவர்கள்
ADDED : செப் 26, 2024 10:34 PM
ராணிப்பேட்டை,:ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில், அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 17 ஆண்டுகளாக சந்தானலட்சுமி, 57, என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மாணவ, மாணவியருடன் நல்ல முறையில் பழகி, எளிமையான முறையில் கல்வி கற்பித்ததால், மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியையாக இருந்தார்.
இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அவரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதையறிந்த மாணவ - மாணவியர், ஆசிரியை வேறு பள்ளிக்கு செல்லக்கூடாதென கதறி அழுதனர்.
ஆசிரியையை சூழ்ந்து கொண்டு, 'மிஸ் போகாதீங்க மிஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்...' என அழுதனர். அவர்களின் பாசப் பிடியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த ஆசிரியையும், அழுது கொண்டே மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதை பார்த்த மற்ற ஆசிரியர்களும் கண் கலங்கினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் தேம்பி அழுவதை கண்டு, கண் கலங்கினர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை ஓய்வுபெற இன்னும் ஓராண்டு தான் உள்ளது. அதனால் அவரை இங்கேயே பணியாற்ற வாய்ப்பு தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

