ADDED : மே 19, 2024 02:30 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களான அரளி, மல்லிகை, நத்தியாவட்டை, இட்லி பூ, கொய்யா, மா, பாக்கு, தென்னை, வாழை, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். வயலில் உள்ள செடிகளுக்கு, மட்கிய தொழு உரத்துடன் அசடோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, பேசில்லஸ் மற்றும் வேம் ஆகிய உயிர் உரங்களை கலந்து செடிகளுக்கு இட்டு மண் அணைக்க வேண்டும்.
செடிகளை சுற்றி மழைநீர் தேங்கும்படி வட்ட பாத்தி அமைக்க வேண்டும். வயலில் தண்ணீர் தேங்க, வரப்புகளை உயர்த்தி கட்ட வேண்டும். அதிக அளவு தண்ணீர் தேங்காமல் வெளியேற, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

