/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டில் முதன் முறையாக அரசு பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., வாயிலாக நேர்முகத்தேர்வு
/
நாட்டில் முதன் முறையாக அரசு பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., வாயிலாக நேர்முகத்தேர்வு
நாட்டில் முதன் முறையாக அரசு பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., வாயிலாக நேர்முகத்தேர்வு
நாட்டில் முதன் முறையாக அரசு பொறியியல் கல்லுாரியில் ஏ.ஐ., வாயிலாக நேர்முகத்தேர்வு
ADDED : செப் 07, 2024 01:57 AM

ஓமலுார்: சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், மூன்று துறைகளில் பயிலும், 159 மாணவ - மாணவியருக்கு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, 'ரோபோ' கேள்வி எழுப்பி, குரல் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 20 நபர்களை கொண்ட குழுவாக தனித்தனியாக மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப் வாயிலாக தேர்வு நடந்தது. இதில், மாணவர்கள் கூறும் பதிலை உள்வாங்கி, குறுக்கு கேள்விகளையும், ரோபோ கேட்டது.
நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் தனித்திறன், இன்ஜினியரிங் கல்வி அறிவுத்திறன், கணித புலமை உள்ளிட்ட அடிப்படை இன்ஜினியரிங் தேவைக்கான அனைத்துக்கும் கேள்வியை தானாக உருவாக்கி, அதற்குரிய பதிலை கொண்டு, மதிப்பெண்களை தனித்தனியாக பாடவாரியாக ரோபோ வழங்கியது.
அதன் மதிப்பீடுகளைக் கொண்டு, இறுதிக்கட்டமாக அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி சோபியா தலைமையில் இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
சோபியா மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் கோபி ஆகியோர் கூறியதாவது:
வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வில் மாணவர்கள் எதிரே உள்ளவர்களை கண்டு அச்சப்பட்டு வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
எதிரே யாரும் இல்லாமல் கணினி வாயிலாக வரக்கூடிய கேள்விகளுக்கு பதற்றம் இல்லாமல் பதிலளிக்க முடியும். மாணவர்கள் அச்சமின்றி நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் விஜயன் கூறியதாவது:
லண்டனில் உள்ள 'பாபோன்' ஐ.டி., நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான அருள் ஆனந்தம், சேலம் அரசு பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்.
தான் பயின்ற கல்லுாரியில் தகுதியான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் நேர்முகத் தேர்வை அவர் நடத்தி உள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோ வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்த நிறுவனம், இருவர் சிறப்பாக செயல்பட்டதால், இருவருக்கும் பணி உத்தரவாத ஆணையை வழங்கினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.