/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு அறிவுரை
/
மண் பரிசோதனை அவசியம்: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஏப் 28, 2024 04:32 AM
பனமரத்துப்பட்டி: மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு அறிக்கை:
மண் வளத்தை பாதுகாக்க, மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட கனிம, இயற்கை உரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி சுற்றுச்சூழலை காக்க மண் பரிசோதனை அவசியம். பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைந்துவிடும். மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியம். மண் அரிப்பு, நீர் கரையோட்டம், சத்துகள் ஆவியாதல் போன்ற காரணத்தால் மண்வளம் குன்றிவிடும்.
மண் வளத்தை நிலை நிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, லாபத்தை மேம்படுத்தலாம். மண்ணின் வளத்தை பேணி காக்க தேவையான அளவு அங்கக உரங்கள், கணிசமான ரசாயன உரங்கள் இட வேண்டும். பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத்திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் செய்ய வேண்டும். தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம்.
ஏக்கருக்கு, 7 முதல், 10 இடங்களில் மண் சேகரிக்க வேண்டும். மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி வேர், தண்டு, புல், கல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சேகரித்த மண்ணை நன்றாக கலந்து அரை கிலோ மண்ணை, துணி பையில் வைத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்த விபரங்களுக்கு பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

