/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்., கூட்டத்தில் வாட்டர் பாட்டில் வீச்சு
/
டவுன் பஞ்., கூட்டத்தில் வாட்டர் பாட்டில் வீச்சு
ADDED : மார் 01, 2025 02:52 AM

ஆத்துார்: டவுன் பஞ்., கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருவர் மீது ஒருவர் குடிநீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி டவுன் பஞ்., கவுன்சிலர் கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த தலைவி கவிதா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கலியவரதராஜ், 'சில வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆளுங்கட்சியில் உள்ள மற்ற தி.மு.க., - காங்., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி தருவதில்லை' என்றார்.
அதற்கு, 7வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில், 'தவறான தகவல் கூற வேண்டாம்' என்றார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், அவர்கள் மேஜை முன் இருந்த குடிநீர் பாட்டில்களை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வீசினர்.
அப்போது, தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு தங்கதுரை, கவுன்சிலர் செந்தில் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றார்.
இதனால், தலைவியின் கணவரான தி.மு.க., கவுன்சிலர் ராஜா உள்ளிட்டோர், தங்கதுரையை சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். மற்ற போலீசார் சமாதானம் செய்ததால், கவுன்சிலர்கள் கலைந்தனர். இந்த வாட்டர் பாட்டில் வீச்சு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.