/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.77 லட்சம் கடனை செலுத்தாமல் மோசடி அங்கன்வாடி ஊழியர் மீது பெண்கள் புகார்
/
ரூ.77 லட்சம் கடனை செலுத்தாமல் மோசடி அங்கன்வாடி ஊழியர் மீது பெண்கள் புகார்
ரூ.77 லட்சம் கடனை செலுத்தாமல் மோசடி அங்கன்வாடி ஊழியர் மீது பெண்கள் புகார்
ரூ.77 லட்சம் கடனை செலுத்தாமல் மோசடி அங்கன்வாடி ஊழியர் மீது பெண்கள் புகார்
ADDED : ஜூலை 31, 2024 11:18 PM
சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்புரத்தை சேர்ந்த மகளிர் குழு பெண்கள் பலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் பானுமதி, 40. அவர், 100க்கும் மேற்பட்ட பெண்களின் அவசர தேவைக்கு தலா, 35,000 முதல் 'மைக்ரோ பைனான்ஸ்' மூலம் கடன் வாங்கி கொடுத்தார். அதனால், 'எங்கள் ஆவணங்களை பயன்படுத்தி, அவருக்கு கடன் பெற்று தர வேண்டும்' என, எங்களுக்குள் ஒப்பந்தம் பேசி அதன்படி ஆதார், பான், ரேஷன் கார்டுகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி, 18 பைனான்ஸில், 77.24 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டார்.
அதில் சில தவணைகள் மட்டும் செலுத்தியதோடு சரி. பின் கடன் தொகை செலுத்துவதை நிறுத்திவிட்டார். அதனால் பைனான்ஸ் தரப்பில் தவணைத்தொகை கேட்டு, எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தினமும் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்து அச்சுறுத்துகின்றனர். இதுதொடர்பாக பானுமதியிடம் முறையிட்டால் அலட்சியமாக பதிலளிக்கிறார். ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் பானுமதி, மருத்துவ விடுப்பெடுத்து தலைவாசல் அடுத்த இலுப்பநத்தத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு சென்று, அவரிடம் பேச்சு நடத்தியும் பணம் செலுத்த முன்வரவில்லை. அதனால் கலெக்டர், எஸ்.பி., அலுவலத்தில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பானுமதியின் கணவர் சக்திவேல், 45, கூறுகையில், ''மகளிர் குழுவை சேர்ந்த பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் வாங்கியது உண்மை. எங்களுக்கு, 7 மாதம் அவகாசம் கொடுத்தால் பணத்தை செலுத்திவிடுவோம். விரைவில் புத்திரகவுண்டம்பாளையத்துக்கு வந்துவிடுவோம்,'' என்றார்.