ADDED : மார் 11, 2025 07:12 AM
சேலம்: வீராணம் அருகே, எம்.பள்ளிப்பட்டி அம்மன் கோவில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 37. சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ஊழியராக பணிபுரிகிறார். கடந்த, 8 இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு, வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வீராணம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் தள்ளிக்கொண்டு சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த கும்பல் பூபதியை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த, 20 கிராம் தங்க செயின் மற்றும் மொபைல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து வீராணம் போலீசார் நடத்திய விசாரணையில், வீராணத்தை சேர்ந்த ஒன்பது பேர் கும்பல் செயில் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், வயக்காடு முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த சக்திவேல், 23, தாதம்பட்டியை சேர்ந்த ராமு, 24, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, ஏழு பேரை தேடி வருகின்றனர்.