ADDED : டிச 07, 2024 09:50 PM
சேலம்:ஜவ்வரிசி விலை வீழ்ச்சியால் தமிழகத்தில், 2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் அடைந்துள்ளது. விலை குறைவால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேகோ - ஸ்டார்ச் நலச்சங்க மாநில பொருளாளர் சிவக்குமார் கூறியதாவது:
சேலம் உள்பட, ஆறு மாவட்டங்களில், 100 சேகோ ஆலைகள், 50 ஸ்டார்ச் ஆலைகள் செயல்படுகின்றன. சேகோ ஆலைகளில் தினமும் சராசரியாக, 15 டன் முதல், 30 டன் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்டார்ச் ஆலைகளில், 10 முதல், 15 டன் உற்பத்தியாகிறது.
ஆனால் விலை, விற்பனை குறைவால், ஆலைகளில் 1 லட்சம், சேகோசர்வில், 1 லட்சம் என, 2 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஸ்டார்ச், 20,000 மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
கடந்த நவம்பர் இறுதியில் இருந்து மரவள்ளிக்கிழங்கு அறுவடை துவங்கியதால், 75 சதவீத ஜவ்வரிசி ஆலைகளில், உற்பத்தி நடக்கிறது. ஸ்டார்ச் ஆலைகளில் கடந்த, 15 நாட்களாக உற்பத்தி இல்லை. வெயில் அடிக்கும்போது ஸ்டார்ச் உற்பத்தி துவங்கும்.
ஜவ்வரிசி உற்பத்தி, தமிழகத்தில் அதிகம். ஆனால் வட மாநிலங்களுக்கு அதிகம் விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு காலை உணவு திட்டத்தில், ஊட்டச்சத்து பொருளான ஜவ்வரிசி கிச்சடி, மாணவ, மாணவியருக்கு வழங்கலாம். இதை பின்பற்றி பிற மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. அதேபோல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்க வேண்டும்.
கடந்த ஆகஸ்டில் சேகோ மூட்டை 90 கிலோ, 4,500 முதல், 4,800 ரூபாய் வரை விற்றது. பின் படிப்படியாக குறைந்து, தற்போது, 3,400 முதல், 3,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஸ்டார்ச் மூட்டை, 3,400 முதல், 3,500க்கு விற்றது, தற்போது, 2,400 முதல், 2,800 ரூபாய் வரை விற்பனையாகிறது.
பண்டிகையின்போது தினமும், 10,000 முதல், 15,000 ஜவ்வரிசி மூட்டைகள் விற்றன. தற்போது, 5,000 மூட்டைகளே விற்கின்றன. 50 சதவீதத்துக்கு மேல் விற்பனை குறைந்துள்ளது. விலை குறைவால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவராத்திரியின்போது வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை அதிகம் இருக்கும். அப்போது விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.