/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் சூழ்ந்ததால் 2 ரேஷன் கடைகளை திறக்கல
/
மழைநீர் சூழ்ந்ததால் 2 ரேஷன் கடைகளை திறக்கல
ADDED : டிச 22, 2024 12:53 AM
மழைநீர் சூழ்ந்ததால் 2 ரேஷன் கடைகளை திறக்கல
பனமரத்துப்பட்டி, டிச. 22-
மழைநீர் சூழ்ந்ததால் மல்லுாரில் இரு ரேஷன் கடைகள் திறக்கப் படவில்லை. இதனால் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் மல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகே தாழ்வான இடத்தில் இரு ரேஷன் கடைகள் உள்ளன. அங்கிருந்து, 1,350 கார்டுதாரர் களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் கனமழை கொட்டியது. இதனால் ரேஷன் கடை முன் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. 5 அடிக்கு மேல் தேங்கியதால், ரேஷன் கடைக்கு செல்லமுடியவில்லை. இதனால் இரு கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை. பொருட்கள் வாங்க வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதேபோல் சுனைக்கரட்டில் உள்ள பெருமாள் கோவிலுக்கு, ரேஷன் கடை வழியே பக்தர்கள் செல்வர். மழைநீரால் சனிக்கிழமையான நேற்று, பக்தர்கள், கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மல்லுார் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், சாக்கடை கால்வாய் வழியே மழைநீரை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதன் வழியே தண்ணீர் வெளியேறவில்லை.
இதுகுறித்து கார்டுதாரர்கள் கூறியதாவது: ஒட்டேரிக்கு கழிவுநீர் செல்லும் தடத்தை சிலர் அடைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதனால் ரேஷன் கடை பக்கம், தண்ணீர் திரும்பி வருகிறது. குறைந்த அளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால், ஒரு ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு இடுப்பளவு தேங்கி நிற்பதால் ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. கட்சிக்காரர்கள், அரசு அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். மழைநீர் தடத்தில் உள்ள அடைப்பை எடுத்து விட யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்போது தண்ணீர் குறையும், அரிசி வாங்க முடியும் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.