/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதிவேற்றம் செய்யாத 2,000 பட்டா வங்கி கடன் பெற முடியாமல் தவிப்பு
/
பதிவேற்றம் செய்யாத 2,000 பட்டா வங்கி கடன் பெற முடியாமல் தவிப்பு
பதிவேற்றம் செய்யாத 2,000 பட்டா வங்கி கடன் பெற முடியாமல் தவிப்பு
பதிவேற்றம் செய்யாத 2,000 பட்டா வங்கி கடன் பெற முடியாமல் தவிப்பு
ADDED : ஜன 16, 2024 11:37 AM
மேட்டூர்: இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய வருவாய் துறை, கணினியில் பதிவேற்றம் செய்யாததால், 2,000 பேர் வங்கி கடன் பெற முடியாமல் மேட்டூரில் தவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில், 62,919 பேர் வசிக்கின்றனர். 1934ல் மேட்டூர் அணை கட்டி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது அடிவாரத்தில் மிக குறைவான வீடுகள், அரசு குடியிருப்புகள் மட்டுமே இருந்தன. காலப்போக்கில் மேட்டூர் அணை அடிவாரத்தில் குடியிருப்புகள் கூடுதலானது. தொடர்ந்து, 50 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வீடு கட்டி வசித்த மக்களுக்கு அரசு சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. எனினும், நகராட்சியில் நத்தம் நிலத்தில் வீடு கட்டியோர், தனிப்பட்டா தருமாறு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2018ல் தனி தாசில்தார் தலைமையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணி துவங்கியது. அதன்படி மேட்டூரில், 2,000 பேருக்கு நிலத்தை அளவீடு செய்து வருவாய்துறை பட்டா வழங்கியது. ஆனால், பட்டாக்களை நகரவை அளவை பதிவேடுகளில் கணினி பதிவேற்றம் செய்யவில்லை.
இதனால் மேட்டூர் நகராட்சியும் அந்த வீடுகளுக்கு வரி விதிக்க முடியவில்லை. பட்டா வைத்துள்ளவர்களால் வீடுகளை புதுப்பிக்க வங்கி கடனும் பெற முடியவில்லை. விற்பனை செய்ய பத்திரப்பதிவும் செய்ய முடியவில்லை.
''இதுகுறித்து ஆர்.டி.ஓ., தணிகாசலத்திடம் பலமுறை மனு தரப்பட்டது. அவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய சப்-கலெக்டர் பொன்மணியிடம் மனு கொடுத்துள்ளோம்,'' என்று, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, மேட்டூர் தாலுகா செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி கூறுகையில், ''நான் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. 2,000 பட்டாக்கள் வரை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய நடைமுறைகளுக்குப் பின், தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டா கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என்றார்.