ADDED : அக் 29, 2026 03:50 AM
சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த, ரவுடி டேவிட், 40. கடந்த, 26ல் புதுரோடு மேம்பாலத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து, கூலிப்படையை சேர்ந்த, 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போலீசார், மேலும், 3 பேரை, நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
டேவிட், அவரது நண்பர் அமிர்தராஜுக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து டேவிட் பழகிய பெண்ணுடன், அமிர்தராஜ் பழகியுள்ளார். இதிலும் தகராறு ஏற்பட, இருவரும் தனித்தனியே தொழில் செய்தனர்.
இந்நிலையில் அமர்தராஜ் ஒரே நிலத்தை பலரிடம் காட்டி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் இருந்த ரவுடி தீனதயாளனுக்கு, டேவிட் மீது தொழில் போட்டி இருந்தது தெரிந்தது. இதனால் தீனதயாளன், அமிர்தராஜ் சேர்ந்து, கூலிப்படையை ஏவி கொன்றுள்ளனர்.
மேலும், ஒரு வாரமாக, டேவிட் செல்லும் இடம், எந்த எந்த பாதையை பயன்படுத்தினார் என்பதை, 3 பேர் கண்காணித்தது தெரியவந்தது. அதன்படி, சேலம், அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்த விக்ரம், 23, குமரகிரி ஏரியை சேர்ந்த தினேஷ், 24, பெரியகிணறு சந்தோஷ், 25, ஆகியோரை கைது செய்தோம். வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும், கொலைக்கு மூளையாக செயல்பட்ட தீனதாயளன், அமிர்தராஜை, இந்த வழக்கில் கைது செய்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
