ADDED : அக் 11, 2025 01:01 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு தொடங்கிய கனமழை, பின் மிதமான அளவில் பெய்தது. பின் விட்டு விட்டு நள்ளிரவு வரை நீடித்தது.
குறிப்பாக கோரிமேடு, அஸ்தம்பட்டி, 5 ரோடு, சூரமங்கலம், புது பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, குகை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கொட்டி, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகினர். தாழ்வான பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், அதில் வசிப்போர் அவதிப்பட்டனர். அதேபோல் மாவட்ட பகுதிகளிலும் மழை பரவலாக பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சேலத்தில் அதிகபட்சம், 62.5 மி.மீ., மழை பதிவானது. அதேபோல் ஆணைமடுவில், 45, தம்மம்பட்டி, 21, ஏற்காடு, 19.2, கரியகோவில், 12, ஏத்தாப்பூர், 11, மேட்டூர், 4.8, வாழப்பாடி, 4, ஆத்துார், 1.6, ஓமலுாரில், 1 மி.மீ., மழை பதிவானது.